Sunday, May 13, 2018

62. திவ்யதேச தரிசன அனுபவம் - 41 திருப்பிருதி (103) (ஜோஷிமட் - நந்தப்பிரயாகை)

தரிசனம் செய்த நாள்: 04.05.18  வெள்ளிக்கிழமை  
 வடநாட்டுத் திருப்பதிகள் - 12  
7. திருப்பிருதி (103)  

8. திருப்பிருதி
வழங்கு முயிரனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்குங் கவந்தன் விறற்றோட் - கிழங்கைப்
பொருப்பிருதிக் குங்கிடந்தாற் போற்றுணிந்து வீழ்த்தான்
திருப்பிருதிக் கென்னெஞ்சே! செல். (103)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

ரிஷிகேஷிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், கடல்மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது திருப்பிரிதி அல்லது திருப்பிருதி திவ்யதேசம். பெருமாளின் மீது பக்தர்களுக்கும், பக்தர்கள் மீது பெருமாளுக்கும் இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப்பிரீதி என்று பெயர் பெற்று,  பிறகு இந்தப் பெயர் திருப்பிருதி என்று  மருவியிருக்கலாம்.






இங்கிருந்து பத்ரிநாத் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் குறிப்பிட்ட சில நேரங்களில்தான் திறந்திருக்கும் என்பதால், பத்ரிநாத் செல்லும் யாத்திரிகர்கள் இந்த நேரத்தை அனுசரித்து இங்கு இறங்கி இந்தக் கோவிலில் தரிசனம் செய்து கொள்ள வேண்டும்.

திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் இருக்கிறார். கோவிலுக்கு வெளியில் உள்ள தகவல் பலகையிலும் பெருமாளின் பெயர் பரமபுருஷன் என்றும், அவர் புஜங்க சயனைக்  கோலத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போது இந்தக் கோவிலில் எழுந்தருளியிருப்பவர் இருந்த கோலத்தில் சேவை சாதிக்கும் நரசிம்மர். இந்தக் கோவில் நரசிங் மந்திர் என்றே அழைக்கப்படுகிறது.




எனவே ஆழ்வாரால் பாடப்பட்ட திருப்பிருதி திவ்யதேசம் இது இல்லையென்றும், அது
திபெத்தில் மானசரோவர் ஏரிக்குப் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும், தற்போது அந்த திவ்யதேசம் இல்லை என்றும் ஒரு கருத்து உண்டு.

இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர்  இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோதிமதம்,கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை)

நந்தன் என்ற அரசன் இந்தத் தலத்தில் தவம் செய்ததால் இந்த ஊருக்கு நந்தப்பிரயாகை என்றும் பெயர் உண்டு.

இங்குள்ள நரசிம்மர் விக்கிரகம் சாளக்கிராமங்களினால் உருவாக்கப்பட்டது. நாங்கள் சென்ற சமயத்தில் நரசிம்மர் வண்ண ஒளிவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ஒலிபெருக்கியில் பஜனைப் பாடல்கள் ஒலிக்க, அர்ச்சகரும், பக்தர்களும் உற்சாகத்துடன்  ஆடியபடி பெருமாளை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.


குளிர்காலத்தில் பத்ரிநாத் ஆலயம் ஆறு மாதங்கள் (நவம்பர் முதல் ஏப்ரல்
வரை) மூடப்பட்டிருக்கும்போது, பத்ரிநாத் பெருமாள் இந்தக் கோவிலில்தான் எழுந்தருளியிருப்பார்.

மூலவர் - பரமபுருஷன்

புஜங்க சயனம் . கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்,

தாயார் - பரிமளவல்லி நாச்சியார்

விமானம் - கோவர்த்தன விமானம்

தீர்த்தம் - மாநஸரஸ் புஷ்காரனி, கோவர்த்தன தீர்த்தம், இந்திரா தீர்த்தம்

இந்தக் கோவிலுக்கு அருகில் வாசுதேவப் பெருமாள் கோவில் இருக்கிறது. ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது.

















திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம்
திருமொழியில், 10 பாடல்களில் திருப்பிருதி திவதேசப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். பாசுரங்கள் இதோ.












நாலாயிர திவ்யப் பிரபந்தம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
முதற்பத்து 
இரண்டாம்  திருமொழி

1. வாலிமாவலத் தொருவனதுடல்கெட வரிசிலை வளைவித்து அன்று
ஏலநாறுதண்  தடம்பொழி லிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகி லதிர்தர அருவரை அகடுறமுகடேறி,
பீலிமாமயில் நடஞ்செயும்தடஞ் சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே. (958)

2. கலங்கமாக் கடலரிகுலம் பணிசெய்ய அருவரையணைகட்டி,
இலங்கைமா நகர்ப்பொடிசெய்த வடிகள்தாம் இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல் வனவிற லிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர,
பிலங்கொள் வாளெயிற்றரிய வைதிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே. (959)

3. துடிகொள்  நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து ஆயர்
இடிகொள்  வெங்குரலின விடையடர்த்தவன் இருந்தநல்லிமயத்து,
கடிகொள் வேங்கையின்நறு மலரமளியின்மணியறை மிசைவேழம்,
பிடியினோடு வண்டிசைசொலத்துயில் கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே. (960)

4. மறங்கொளாளரி யுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம்
திறந்து வானவர்மணி முடிபணிதர இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திட க்கிடந்தரு கெரிவீசும்,
பிறங்குமாமணி யருவியொடிழிதரு பிரிதிசென்றடைனெஞ்சே.(961)

5. கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய் மேகலையலர் மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய் மாக்களிறீள வெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து,
பிரசவாரி தன்னிளம்பிடிக் கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே. (962)

6. பணங்களாயிர முடையநல்ல வரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கிவான வர்மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,
மணங்கொள் மாதவிநெடுங் கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்குபூம் பொழில்நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடைநெஞ்சே! (963)

7. கார்கொள் வேங்கைகள் கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள் வேங்கைகள்புன வரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம் பரவிநின்றடி தொழும் பிரிதிசென்றடைநெஞ்சே. (964)

8. இரவுகூர்ந் திருள்பெரு கியவரைமுழை இரும்பசியதுகூர,
அரவமா விக்குமகன் பொழில்தழுவிய அருவரையிமயத்து,
பரமனாதி யெம்பனிமுகில் வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடு சென்றடிதொழும் பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே.(965)

9. ஓதியாயிர நாமங்களு ணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,
ஏதமின்றி நின்றருளும்நம் பெருந்தகை இருந்தநல்லிமயத்து,
தாதுமல் கியபிண்டி விண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி,
பேதைவண்டு களெரியென வெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே. (966)

10. கரியமாமுகிற் படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,களிறென்று
பெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு பிரிதியெம்பெருமானை,
வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனதொலிமாலை,
அரியவின் னிசைபாடு நல்லடியவர்க்கு அருவினையடயாவே. (967)

ஓம் நமோ நாராயணாய!

No comments:

Post a Comment