Tuesday, February 6, 2018

54. திவ்யதேச தரிசன அனுபவம் - 31 திருக்கடித்தானம் (70)

தரிசனம் செய்த நாள்: 23.01.18  செவ்வாய்க்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
12. திருக்கடித்தானம் (70)


காண விரும்பமெண்கண் கையுந் தொழவிரும்பும்
பூண விரும்புமென்றன் புன்றலைதான் - வாணன்
திருக்கடித்தா னத்தான் றிகிரியான் றண்டான்
திருக்கடித்தா னத்தானைச் சென்று. (70)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி  

செங்கணாஞ்சேரிக்கு அருகில் அமைந்துள்ள திவ்யதேசம் இது. பஞ்சபாண்டவர்களில் இளையவனான சகதேவனால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் இது. அதனால் இது சகதேவன் கோவில் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 

கடி என்ற பெயர் கொண்ட மூன்று திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு சோளிங்கர் என்று அழைக்கப்படும் கடிகாசலம் அல்லது   திருக்கடிகை மற்றது கடிநகர் என்னும் தேவப்பிரயாகை.

கடி/கடிகை  என்றால் ஒரு நாழிகை. (கடிகாரம் என்ற பெயர் கடிகை +ஆரம் என்ற சொற்களிலிருந்து வந்ததுதான்) இந்த மூன்று திவ்யதேசங்களிலுமே ஒரு நாழிகை நேரம் நாம் இருந்தால், நம் பாவங்கள் தொலைந்து, நமக்கு பகவானின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஏகாதசி விரதத்தை முறையாக அனுசரித்து ஏற்றம் பெற்ற ருக்மாங்கதனின் கதை பத்மபுராணத்தில் கூறப்படுகிறது. அந்த ருக்மாங்கதன் இந்தக் கோவிலுக்கு அருகே நந்தவனம் அமைத்துப் பெருமாளுக்கு மலர் சேவை (புஷ்ப கைங்கரியம்) செய்து வந்தான்.

ருக்மாங்கதனின் நந்தவனத்தில் பூத்த மலர்களின் அற்புதமான நறுமணம்
பற்றி நாரதர் மூலம் அறிந்த இந்திரன் சில தேவர்களை அனுப்பி இந்த நந்தவனத்திலிருந்த மலர்களைக் கொண்டு வரச் செய்தான். இரவில் மலர்கள் பறித்துச் செல்லப்பட்டதால், காலையில் ருக்மாங்கதனுக்கு மலர்கள் இல்லாமல் போய் விட்டது. மலர்கள் களவாடப்படுவதைத் தடுக்க ருக்மாங்கதன் சில காவலர்களை நியமித்தான். அடுத்த நாள் மலர் பறிக்க வந்த தேவர்கள் ருக்மாங்கதனின் காவலர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

பிடிபட்டவர்கள் தேவர்கள் என்று அறிந்ததும் ருக்மாங்கதன் அவர்களை விடுவித்து விட்டான். ஆயினும் பூவுலகில் சிறிது காலம் தங்கி விட்டதால் தங்களால் தேவலோகத்துக்குத் திரும்பப் போக முடியாது என்று அவர்கள் கூறினர். ஏகாதசி விரதம் இருந்த ஒரு பெண் தன புண்ணியத்தைத் தங்களுக்கு அளித்தால்தான் தங்களால் தேவலோகத்துக்குத் திரும்ப முடியும் என்று அவர்கள் கூறியதால், ஏகாதசி விரதம் இருந்த ஒரு மூதாட்டியைத் தேடித் பிடித்து அவளைத் தான் ஏகாதசி விரதம் இருந்த பலனை அந்த தேவர்களுக்கு அளிக்கும்படி ருக்மாங்கதன் கேட்டுக்கொள்ள, அவளும் அவ்வாறே தன் புண்ணியத்தை அளித்தாள். ருக்மாங்கதன், மூதாட்டி இருவருக்கும் பெருமாள் அற்புத நாராயணனாகக் காட்சி அளித்தார் என்பது இந்தத் தலத்தின் வரலாறு. கடி என்றால்நறுமணம் என்றும் பொருள் உண்டு. மணமுள்ள மலர்கள் பூத்த நந்தவனம் இங்கு இருந்ததாலும், கடித்தானம் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது.

பாண்டவர்களின் தந்தை பாண்டு இங்குதான் இறந்தார் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 9ஆம் தேதி தீபக்கழா என்ற உற்சவத்தில் வாழை இலைகளை அடுக்கி, அதைப்  பாண்டுவின் உடலாகக் கருதி எரிக்கும் சடங்கு இங்கு நடைபெறுகிறது.

இங்கு அற்புத நாராயணனின் சந்நிதிக்குப் பின்புறம் நரசிம்மர் சந்நிதி உள்ளது. பெருமாளுக்கு இடப்புறம் தட்சிணாமூர்த்தியின் சந்நிதி உள்ளது. இவரை  பிரகாரத்தில் ஒரு துவாரம் வழியாக தரிசிக்கலாம்.

மூலவர் - அற்புத நாராயணன், அம்ருத நாராயணன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்  

தாயார் - கற்பகவல்லி நாச்சியார் (தனிக்கோவில் சந்நிதி இல்லை. பெருமாளின் திருமார்பில் உறைந்திருக்கும் தாயாருக்கே இந்தப் பெயர்)

விமானம் - புண்யகோடி விமானம் 

தீர்த்தம் - பூமி தீர்த்தம் 

விருட்சம் - மகிழ மரம் 

இந்த திவ்யதேசம் பற்றி எங்கள் யாத்திரை வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் வழங்கிய உரையின் காணொளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 



நம்மாழ்வார் திருவாயமொழியில் இந்த திவ்ய தேசம் பற்றி 11 பாசுரங்கள் பாடியுள்ளார். பாசுரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
எட்டாம் பத்து
ஆறாந் திருமொழி
1. எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. (3726)

2. திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. (3727)

3. ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுரைகின்ற மாயப் பிரானே. (3728)

4. மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே. (3729)

5. கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்
கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே. (3730)

6. கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே. (3731)

7. கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே. (3732)

8. தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே. (3733)

9. தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே. (3734)

10. அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. (3735)

11. சோலை திருக்கடித் தானத் துறைதிரு மாலை,
மதிள்குரு கூர்ச்சடகோபன்சொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே. (3736)

ஓம் நமோ நாராயணாய!




No comments:

Post a Comment